• +94 65 22 41 069
  • dvtbatticaloa@vtasl.gov.lk

சாத்தியமாகும் Inception? – கனவைப்பற்றிய ஒரு விஞ்ஞானத் தேடல்

  • 2017-10-25
  • Nusair

சில ஆண்டுகளுக்கு முன் ஹோலிவூடில் Inception என்றொரு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது.அடுத்தவரின் கனவினுள் நுழைந்து ஒரு விஷயத்தை புகுத்துதல் அல்லது திருடுதல் தான் படத்தின் வன்லைன்.பாவம்!வழமை போன்றே ஹோலிவூட் படங்களை டப் செய்து ,தமிழ் நாமம் சூட்டும் விற்பன்னர்கள் இதற்கும் ஒரு பெயரிட்டார்கள்.அது “கனவு வேட்டை “.சரி விஷயத்திற்கு வருவோம். உண்மையிலேயே இப்படத்தில்  வருவது போல் ஒருவரின் கனவினுள் செல்ல முடிந்தால் …நாம் விரும்பும் விஷயத்தை திணிக்க முடிந்தால்(கனவு வேட்டைதான்) ….அட…அதெல்லாம் வேண்டாம் என்ன கனவு காண்கிறார் என்பதை அறிய முடிந்தாலே தேவலைதான்….அறிவியல் மிக ஆரம்பக்கட்டங்களில் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று.

கனவு ..நாமே ஹீரோவாக சஞ்சரிக்கும் மாய உலகம்.கனவுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிவியலால் இன்னும் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. நாம் அடிக்கடி நினைப்பதோ ,எப்போதோ நினைத்ததோ ,நினைத்தே பார்த்திராததோ கூட கனவில் வரலாம்.கனவுக்குள் கனவு வரலாம்(Lucid Dream).அசையவே விடாத “தூக்க பக்கவாதம்”(அமுக்குவான் பேய்)எனப்படும் Sleep Paralysis ஆகவும் வரலாம்.

sleep paralysis

கனவையறிவதன் முதற்படி, கனவு கண்டவரிடம் சென்று கேட்பதுதான்.சொன்னால் தானே?ஆனால் அவரே முன்வந்து சொன்னால் கூட பத்து சதவீதமான கனவுகளைத்தான் சரியாக சொல்ல முடியும்.ஏனெனில் விழித்த சிறிது நேரத்தினுள்ளேயே மீதி மறந்து விடுகின்றது என்கிறது அறிவியல்.

கணத்தாக்கங்களின் போது மூளையில் உருவாகும் சமிஞ்சை அலைகள் மிகவும் வீரியம் குறைந்த மின்காந்த அலைகளாகும்.இவற்றை வைத்தே ஒரு செயற்பாட்டிற்கு பங்களிக்கும் மூளையின் பாகத்தை கண்டறிந்தார்கள் விஞ்ஞானிகள். கிட்டத்தட்ட இதையொத்த ஒரு ஆராய்ச்சியை கனவு காண்பவர்களுக்கு நிகழ்த்தியிருக்கிறார்கள் அமெரிக்காவை சேர்ந்த Frencesca Siclari(University of Wisconsin) தலைமையிலான குழுவினர்.

இதற்காக இவர்கள் 46 பேரைத்தெரிவு செய்து படுத்தியெடுத்திருக்கிறார்கள்(!).இவர்கள் தூங்கும் போது மூளையின் எப்பாகம் இயங்குகிறது என்று அவதானித்து ஒரு விஷயத்தை சொல்கிறார்கள்.அதாவது கனவின் போது பார்வைக்குரிய மூளையின் பின்பகுதியும் ,புலன்களுக்கு பொறுப்பான பகுதியும் அதிக உயிர்ப்புடனும்,தசைத்தொழிற்பாட்டிற்கு உரிய பகுதி ஓரளவாகவும் தொழிற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.ஆகவே,ஒருவர் கனவு காணும் போது அவரின் மூளை பார்ப்பதை,கேட்பதை,நுகர்வதை(ஆம்!) நனவாகவே உணர்வதோடு,அதற்கேற்ப வினையாற்றுகிறது(பக்கத்தில் படுத்திருப்பவருக்கு பலமான அடி விழுவதும் ,ரகசியங்களை உளறிவிடுவதும் இதனால்தான்).

dreaming

இத்தோடு அவர்களை விடாத ஆய்வுக்குழு,என்ன மாதிரியான கனவு கண்டார்கள் என்பதையும் எழுதச் சொல்லியிருக்கிறார்கள்.இதை பலதடவை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான கனவுகளையும் அவற்றின் அலை வடிவங்களையும் பெற்றிருக்கிறார்கள்.இதன் மூலம் கனவையறியும் பயணம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.இதே கையோடு ஒருவர் கனவு காண்கிறாரா இல்லையா என்பதையும் 87% சரியாக கூறி அசத்தியுள்ளனர்.

இது ஒரு புறமிருக்க செயற்கை கனவுகளை உருவாக்கும் பணிகளும் துளிர்விடுகின்றன.(அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ள Dimethyl Triptamine ஐ பயன்படுத்தி கனவு வரவழைப்பது வேறு கதை).கனவுகளை உருவாக்கி ,அவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமானால் ஒருவரின் சிந்தனையில் ஒரு விஷயத்தை பலமாக போட்டு விட முடியும்.கனவுக்கு அப்படியொரு சக்தியுள்ளதா என்றால் கனவில் நமக்கு விழும் அடிகள்,வெட்டுகளால் உண்டாகும் வலி ,விழித்த பிறகும் சிறிது நேரம் இருப்பது போல்தான்.

        சரி…இதனால் என்ன பிரயோசனம்??.பல புதுமையான ஐடியாக்களை பெறலாம்(சுடலாம்).ஏனெனில் சார்பியல் தத்துவம், தையல் ஊசி,DNA யின் கட்டமைப்பு போன்றவற்றிற்கான ஐடியா கனவிலே கிடைத்ததாக சொல்கிறார்கள்.கோமாவிலிருக்கும் நோயாளிகளுடன் உரையாடலாம் என்கிறார்கள். அத்தோடு சில தீர்க்கதரிசனங்களும் கனவாக வரும் என்கிறார்கள்.ஆப்ரஹாம் லிங்கன் தான் கொல்லப்படப் போவதை கனவில் கண்டிருக்கிறார்.9/11,டைட்டானிக் விபத்து போன்ற சம்பவங்களுக்கு முன் ஏதோ அசம்பாவிதம் நடைபெறுவது போல பல மக்கள் கனவில் கண்டர்களாம்(நடக்குமா இல்லையா என்பது அடுத்த பிரச்சினை).ஆய்வுகள் தொடர்கின்றன.பொறுத்திருந்து பார்ப்போம்….

Reccent Posts

சாத்தியமாகும் Inception? – கனவைப்பற்றிய ஒரு விஞ்ஞானத் தேடல்

Read more


Facebook இன் புதிய Explore Feed

Read more